அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வருகிற ஜூன் 15-ந் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வருகிற ஜூன் 15-ந் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கூறினார்.
மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து சிவகங்கை காமராஜர் காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், நடத்தப்பட்டது.
இந்த முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான 69,011 குழந்தைகளும், 6,052 கர்ப்பிணிகளும், 5,485 பாலூட்டும் தாய்மார்களும் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்,
ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள்
இவர்களில் 6 மாதத்திற்குட்பட்ட 877 குழந்தைகள் எடை குறைபாடுடைய மற்றும் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ற உயர வளர்ச்சி மற்றும் வயதிற்கேற்ற எடை ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டதில் 1,852 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என கண்டறியப்பட்டனர்.
எனவே இவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க முதல்- அமைச்சர் "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற சிறப்புத் திட்டத்தினை அறிவித்து, அத்திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரிசெய்வதற்கென, குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்வதற்கு, உடனடியாக பயன்படுத்தக்கூடிய சிறப்பு உணவு ஊட்டச்சத்து பொட்டலங்களையும் அரசு வழங்கி வருகிறது.
ஊட்டச்சத்து பெட்டகம்
அதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேற்கண்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்குவதற்கென 1,301 ஊட்டச்சத்து பெட்டகங்களும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த 99,900 உடனடியாக சாப்பிடும் வகையிலான சிறப்பு உணவு ஊட்டச்சத்து பொட்டலங்களும் பெறப்பட்டு, அவர்களுக்கு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வருகின்ற ஜூன் 15-ந் தேதி வரை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.