தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்


தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
x

தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தீவிர சிகி்ச்சை

காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை புதுச்ே்சரி அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி நாள்தோறும் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 830 பேர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

தமிழக அரசுஅவசர நடவடிக்கை

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து நேற்று 'தினத்தந்தி' யில் செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.

இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சிறப்பு முகாம்கள்

தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அடைந்து 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதிற்கு உட்பட்டவர்கள் 46 பேர், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 60 பேர், 14 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் 194 பேர், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

இந்த நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நாளை (இன்று) தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும். இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.

சென்னை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களில் நாளை (இன்று) 100 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இம்முகாம்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும். எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி பயனாளிகளுக்கு மேல் பயனடைந்துள்ளனர். காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறுவோர் எண்ணிக்கை கடந்த 1½ ஆண்டுகளில் 37 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு இருதய நோய் தொடர்பாக உரிய சிகிச்சையை வழங்க தமிழ்நாடு அரசு 1973-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 'கேத் லேப்' வசதி ஏற்படுத்தியது. தற்போது 19 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் தலா ரூ.4.5 கோடி முதல் 7.5 கோடி மதிப்பிலான 'கேத் லேப்' வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த உயர்தர கருவிகளை படிப்படியாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர். செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர். நாராயணபாபு மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story