சேலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேலத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி சிறப்பு மருத்துவம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர்.
தொடர்ந்து வக்கீல்ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் ஆகிய திட்டங்களை அறிவித்து மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செயல்படுத்தி உள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 5 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முகாமில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை, ஐ.பவுண்டேசன் ஆகிய மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் பங்குபெற்று ரத்த அழுத்தம், சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல்நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துணை மேயர் சாரதா தேவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.