மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் சிறப்பு பூங்கா
பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7¾ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்
பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7¾ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள்
நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கணினி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தசைகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு பூங்கா
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்காக ரூ.7 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் பழைய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் திறந்து வைத்தார்
இந்த பூங்காவை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடவும் அவர்கள் உடல் ரீதியான பயிற்சி பெறவும் விளையாட்டு சாதனங்களுடன் பயிற்சி அளிக்க புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்வி குழும தலைவர் புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.