கோவிலில் சிறப்பு உழவாரப்பணி
கோவிலில் சிறப்பு உழவாரப்பணி நடந்தது.
ஸ்ரீரங்கம்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று ஏராளமான சிவனடியார்கள் சிறப்பு உழவாரப் பணியில் ஈடுபட்டனர். தேசிய இந்து திருக்கோவில்கள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சிவபக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உழவார பணிகள் செய்து வருகின்றனர். இதில் பஞ்சபூத திருத்தலங்களான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகிய 3 தலங்களில் உழவார பணிகள் முடித்து, நான்காவதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று உழவார பணி மேற்கொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 900 சிவபக்தர்கள் கலந்து கொண்டு திருவானைக்காவல் கோவிலின் அனைத்து பகுதிகளையும் தூய்மை செய்தனர். ஆடிப்பூரத் தெப்பக் குளத்தில் புற்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு இந்த கோவிலில் உழவார பணி நடந்ததாக கூறப்பட்டது.