வாலிபர் எரித்துக் கொலை குறித்து தனிப்படை போலீசார் ஆந்திராவில் விசாரணை
வாலிபர் எரித்துக் கொலை குறித்து தனிப்படை போலீசார் ஆந்திராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்
குடியாத்தம்
வாலிபர் எரித்துக் கொலை குறித்து தனிப்படை போலீசார் ஆந்திராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா வனப்பகுதியில் ஜங்காலப்பள்ளி கன்னி கோயில் அருகே 35 வயது ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் துப்பு துலக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் ஒரு தனிப்படையினரும், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான தனிப்படையினர் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட பலமநேர், புங்கனூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று காவல்துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் காணாமல் போன ஆண்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை காட்டியும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் சைனகுண்டா சோதனை சாவடி மற்றும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வெளியூர் பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பும் நபர்கள் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
========