முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடந்தன. தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவில், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.