கோனகர்நாடு அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு 5 ஆயிரம் ருத்ராட்சத்தால் பந்தல் அமைத்து வழிபாடு
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி கோனகர்நாடு அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு 5 ஆயிரம் ருத்ராட்சத்தால் பந்தல் அமைத்து வழிபாடு, மகாசங்காபிஷேகமும் நடந்தது.
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி கோனகர்நாடு அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு 5 ஆயிரம் ருத்ராட்சத்தால் பந்தல் அமைத்து வழிபாடு, மகாசங்காபிஷேகமும் நடந்தது.
ருத்ராட்ச பந்தல்
பகவான் சிவனின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக சிவன் பல ஆண்டுகளாக தியானம் செய்தார். தியானத்தில் இருந்து கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் ருத்ராட்சமாக ஈன்றெடுத்ததாக கூறப்படுகிறது.
சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்தில் இருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்ச மாலை சிவனுக்கு பிரதானமானதாக விளங்குகிறது. கோவில்களில் ருத்ராட்சம் கொண்டு பந்தல் அமைத்தால் சன்னதி குளிர்ச்சியாக காணப்படும் என்பது ஐதீகம்.
அகத்தீஸ்வரர் கோவில்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனகர்நாடு கோட்டை தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 5 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ராட்ச பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சாமி, அம்பாள் சன்னதியில் பொருத்தப்பட்டு வழிபாடு நடந்தது.
அதுமட்டுமின்றி சோமவாரத்தையொட்டி கோவிலில் புனித நீர் அடங்கிய சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அவற்றைக்கொண்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரக சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.