திருவாரூர் தியாகராஜர் கோவில் ரவுத்ர துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் ரவுத்ர துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் ரவுத்ர துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தை வெள்ளி வழிபாடு
தை மாதம் அம்மனுக்கு விசேஷமான மாதமாகும். தை மாத வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிப்பட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தை மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
ரவுத்ர துர்க்கை
அதன்படி நேற்று தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ராகு கால துர்க்கை என்னும் ரவுத்ர துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அப்போது துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தோலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ராஜதுர்க்கை அம்மன் கோவில்
இதேபோல் திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும் திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.