ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடிப்பூரத்தையொட்டி நேற்று கரூர் சுங்ககேட் ஆதிமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆதிமாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நொய்யல்
நொய்யல் அருகே திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை யொட்டி அம்மனுக்க பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.