மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம்,
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடைசி வெள்ளிக்கிழமை
திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் உச்சிகால பூஜையின் போது சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசனம்
இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நேற்று நடப்பாண்டின் கடைசி வெள்ளிக்கிழமை தினமாக இருந்ததால் திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மடப்புரம் கோவிலுக்கு இயக்கப்பட்டன. மேலும் திருப்புவனம்-மடப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
இதேபோல் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவில்களில் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.