பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் மாதம் ஆகும்.அதோடு இந்த மாதத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியாகி தென் திசைைய நோக்கி தனது பயணத்தை தொடங்கும். தென்திசை என்பது எமதர்மன் இருக்கும் திசையாகும்.

புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் உற்சவர் வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதேபோல் ஒத்தக்கடை அருகில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாளும் சக்கரத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

நரசிங்கத்தில் யோக நரசிம்மர், நரசிங்க வள்ளி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் கருட வாகனத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாளும், திருப்பாலை கிருஷ்ணசாமி கோவிலில் கருட வாகனத்தில் நாராயணன் அரவிந்தவள்ளி தாயாரும், வடக்கு மாசி வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவிலில் நவநீத கிருஷ்ணன், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும், அச்சம்பத்து பால தண்டாயுதபாணி கோவிலில் அனந்தபத்மநாத பெருமாள் சயனதிருகோலத்திலும் அருள் பாலித்தனர். மேலும் பக்தர்கள் பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

ஜெனகநாராயண பெருமாள் கோவில்

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் 4 ரதவீதியிலும் ஊர்வலமாக வந்து யாக சாலை மண்டபத்தை அடைந்தனர். அங்கு மேள, தாளம் முழங்க ஜெனகநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அழைத்து வரப்பட்டனர். பின்னர் யாக வேள்வி நடத்தப்பட்டு பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதே போல சோழவந்தான் பணிமனை ஆஞ்சநேயர் கோவில், கருவேப்பிலைபட்டி பெருமாள்கோவில், சோழவந்தான் சனீஸ்வர பகவான் கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவநீத பெருமாள் கோவில்

வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் பக்தர்கள் சார்பில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பஜனை கோஷ்டியினரின் திருவீதி உலா நடந்தது. இந்த வீதி உலாவில் ராமானுஜர் திருவுருவ படத்தை கையில் ஏந்தி திருநாமத்துடன் கூடிய வண்ணகுடை மற்றும் வாத்திய இசைக்கருவிகளோடு பஜனைபாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


Related Tags :
Next Story