புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம், தேவூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,
கோட்டை பெருமாள் கோவில்
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள், சுந்தரவல்லி தாயாருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் உற்சவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பாண்டு ரங்கநாதர் கோவில்
சேலம் செவ்வாய்பேட்டை பாண்டு ரங்கநாதர் கோவிலில் பெருமாள் அனந்த பத்மநாபன் சாமி அலங்காரத்திலும், ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதேபோல் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், கடைவீதி வேணுகோபாலசாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணசாமி, சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள், பட்டை கோவில் வரதராஜ பெருமாள், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், பெரமனூர் பெருமாள் கோவில் என மாநகரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெருமாள் கோவில்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தேவூர்
தேவூர் அருகே சென்றாயனூர் காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த வழிபாட்டில், சென்றாயனூர் காலனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் சன்னதியில் பல வகையான தானியங்களை பக்தர்கள் சூறைவிட்டனர். இந்த கோவிலில் பக்தர்கள், பசு கன்றுகளை காணிக்கையாகவும் செலுத்தினர்.
இதேபோல் அரசிராமணி வெள்ளூற்று பெருமாள், செட்டிபட்டி பாலம் கரிய பெருமாள் கோவில், கோணக்கழுத்தானூர் பெருமாள் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி பெருமாள் கோவில், கோனேரிப்பட்டி பெருமாள் கோவில், மயிலம்பட்டி பெருமாள் கோவில், வெள்ளாளபாளையம் பெருமாள் கோவில், கல்வடங்கம் பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நங்கவள்ளி, மேச்சேரி
நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்று. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல மேச்சேரி கோட்டை ஸ்ரீதேவி-பூதேவி சமேத சென்றாய பெருமாள் கோவில், மேச்சேரி எறகுண்டபட்டி சைவ-வைணவ திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ரங்கநாதர் பெருமாள் கோவில், அமரத்தானூர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், சோரகை மலை வேட்ராயப் பெருமாள் கோவில், பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவில், வனவாசி மலை பெருமாள் கோவில், அமரத்தானூர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.