புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

கோட்டை பெருமாள் கோவில்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது. ஆண்டாள் முத்தங்கி அலங்காரத்தில் கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சவுந்திரராஜ பெருமாள் கோவில்

சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சாமி முத்தங்கி அலங்காரத்திலும், அம்மாபேட்டை முராரிவரதைய்யர் தெருவில் வெங்கடேசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலமேலு தாயாருடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பட்டைக்கோவில் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதேபோல், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்ன வெங்கடாசலபதி, கடைவீதி வேணுகோபாலசுவாமி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி, உடையாப்பட்டி சென்றாய பெருமாள் என மாநகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவூர்

தேவூர் அருகே செட்டிபட்டி பாலம் பகுதியில் உள்ள கரிய பெருமாள் கோவிலில் பல்வேறு பூஜைகள் நடந்தன. மேலும் திருக்கோடி கொடுத்தல் நிகழ்வும் நடந்தது. இதில் சென்றாயனூர், புளியம்பட்டி, ஒடசக்கரை, ஈரோடு மாவட்டம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கோவில்பாளையம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், அரசிராமணி வெள்ளூற்று பெருமாள் கோவில், சென்றாயனூர் காலனி வரதராஜ பெருமாள் கோவில், கோணக்கழுத்தானூர் பெருமாள் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி பெருமாள் கோவில், கோனேரிப்பட்டி பெருமாள் கோவில், மயிலம்பட்டி பெருமாள் கோவில், வெள்ளாளப்பாளையம் பெருமாள் கோவில், கல்வடங்கம் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

காருவள்ளி பெருமாள் கோவில்

ஓமலூரை அடுத்த காருவள்ளி சின்னதிருப்பதியில் வரலாற்று சிறப்பு மிக்க பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட விழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்தநிலையில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையான நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நங்கவள்ளி

நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் மேச்சேரி கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் கோவில், சோரகைமலை வேட்ராய பெருமாள் கோவில், பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில், வனவாசிமலை பெருமாள் கோவில், அமரத்தானூர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story