புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,
கோட்டை பெருமாள் கோவில்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று புரட்டாசி முதலாவது சனிக்கிழமையை யொட்டி சேலம் மாநகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.
பாண்டுரெங்கநாதர் கோவில்
இதேபோல் அம்மாபேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரெங்கநாதர் கோவிலில் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாமி தன்வந்திரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சேலம் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு வெற்றிலை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் டவுன் பாபு நகர் பகுதியில் அலமேலுமங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
லட்சுமி நாராயண சாமி கோவில்
சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், ஆனந்தா பாலம் இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சாமி கோவில், கடைவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் பெருமாள் கோவில் என மாநகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் பெரியகொல்லப்பட்டி வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் சன்னதியில் உள்ள திருக்கோடி கம்பத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷம் எழுப்பி வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் செட்டிபட்டி பாலம் கரிய பெருமாள் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவில், கோணக்கழுத்தானூர் பெருமாள் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி பெருமாள் கோவில், கோனேரி பட்டி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தலைவாசல்
தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. துளசி மாலை அணிவித்தும், திருக்கோடி கம்பத்தில் தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் ஆறகளூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், வீரகனூர் கஜா வரதராஜ பெருமாள் கோவில், மணி விழுந்தான்தெற்கு புதூர் வரதராஜ பெருமாள் கோவில், பெரியேரி கோபாலசாமி கோவில், தேவியாக்குறிச்சி பெருமாள் கோவில், தலைவாசல் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் என தலைவாசல் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.