திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை


திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை
x

நிலவின் தென்துருவத்தை சந்திரயான் விண்கலம் நேற்று வெற்றிகரமாக தொட்டதையொட்டி திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

நிலவின் தென்துருவத்தை சந்திரயான் விண்கலம் நேற்று வெற்றிகரமாக தொட்டதையொட்டி திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

சந்திரன் தலம்

தஞ்சை மாவட்ட பகுதிகளை சுற்றி நவக்கிரக தலங்கள் அமைந்துள்ளன. இதில் திங்களூரில் உள்ள கைலாசநாதர் ேகாவிலும் ஒன்று. நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலமாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு சுப கிரகமான சந்திரன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

சந்திரபகவான் இங்கு தவமிருந்து ஈசனின் அருள் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. சந்திரனுக்கு உரிய பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

சரித்திர சாதனை

இந்தியா அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் மூலம் சந்திரனின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது.

இந்த நிலையில் நிலவில் சந்திராயன் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடக்க வேண்டியும், லேண்டரில் இருந்து ரோவர் கருவி தடங்கலின்றி சந்திரனின் தரையை தொட்டு ஆராய்ச்சி பணி மேற்கொள்ள வேண்டியும் திங்களூர் சந்திரன் கோவிலில் சந்திர பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு அலங்காரம்

அப்போது சந்திர பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சந்திரபகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்ற செயல் அலுவலர் கோவிந்தராஜூ, முன்னாள் மேலாளர் கண்ணன், கணக்கர்கள் செல்வம், கவின்ராஜ், அர்ச்சர்கள் சுப்பிரமணியன், பாலச்சந்தர், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story