அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளி
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளி அம்மன், ராமநாதபுரம் உதிரகாளி அம்மன், ருத்ரமாதேவி அம்மன், காந்தாரி அம்மன், வெட்டுடையாள் காளி அம்மன், பெரியமாரியம்மன், திரவுபதி அம்மன், ராஜகாளியம்மன், கருமாரி அம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிளக்கு பூஜை
பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்து படையல் படைத்து, மஞ்சள் குங்குமம் கொடுத்து வழிபட்டனர். அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். கோவில்களில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி தினத்தையொட்டி வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நேற்று ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.