ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாத வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூரில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு விளக்கேற்றியும், சூடமேற்றியும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். இதேபோல கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வாராகி அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல், சேமங்கி, அத்திப்பாளையம், புன்னம், தவுட்டுப்பாளையம் திருக்காடுதுறை பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
வெள்ளியணை
வெள்ளியணை பச்சபட்டியில் உள்ள பழமையான பால ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு இளநீர், பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் செல்லாண்டிபட்டி, மூக்கணாங்குறிச்சி, ஜெகதாபி, பொரணி பகுதிகளில் உள்ள கோவில்களும் சிறப்பு பூஜை நடந்தது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் , மண்மங்கலம், வாங்கல் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.