ெபருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திருப்புல்லாணியில் சாமி தரிசனத்துக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திருப்புல்லாணியில் சாமி தரிசனத்துக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருப்புல்லாணி பெருமாள் கோவில்
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஸ்ரீஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஆதிஜெகநாதபெருமாள், பத்மாசனித் தாயார், பட்டாபிஷேக ராமர், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் உற்சவர் திருப்புல்லாணி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்தங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்ய நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையில் நின்று ஒன்றன்பின் ஒன்றாக பெருமாளை தரிசனம் செய்தனர். திவான் பழனிவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் பேஷ்கார் கண்ணன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
இதேபோல் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் உள்ள 16 அடி உயர ஆஞ்சநேயருக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேலும் கோவிலோடு சேர்ந்த உப கோவிலான தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், தங்கச்சி மடத்தில் உள்ள ஏகாந்தராமர்கோவில் மற்றும் ஸ்ரீதாஸபக்தஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். ஓம் நமோ நாராயணா, கோவிந்தா, கோபாலா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவாடானை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருவாடானை அருகே பாண்டுகுடி ஸ்ரீதேவி பூதேவி சமேத லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாமி- தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதே போல் தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோவில், புலியூர் ஸ்ரீ ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், திருவாடானை பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கீழக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில், மண்டலகோட்டை பிருந்தாவன நாத பெருமாள் கோவில், முகில்தகம் சொர்ண வருஷம் பெய்த பெருமாள் கோவில், கீழ்க்குடி சிவசூரிய நாராயணப்பெருமாள் கோவில், கட்ட விளாகம் வரதராஜ பெருமாள் கோவில், கள்ளவழியேந்தல் சீனிவாச பெருமாள் கோவில், குளத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத குலசேகர பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.