ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். மேலும் புத்தாண்டை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், காமராஜர் வீதியில் உள்ள அமராபதி விநாயகர், ரங்கநாதன் சாலை சக்தி விநாயகர், பெருமாள் கோவில் தெரு கோட்டை விநாயகர், ரெயிலடி விநாயகர், வண்டிமேடு ராகவேந்திரர், திரு.வி.க. வீதி கைலாசநாதர், நாப்பாளைய தெரு புத்துமாரியம்மன், பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சக்தி விநாயகர், ஆதிவாலீஸ்வரர் மற்றும் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு

இது தவிர மயிலம் முருகன், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர், திண்டிவனம் அருகே தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள், திருவெண்ணெய்நல்லூர் அருகே பையூரில் உள்ள ஞானகுரு தட்சிணாமூர்த்தி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.


Next Story