ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோதண்டராமசாமி கோவில்
ஆங்கில புத்தாண்டையொட்டி அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், ஆலந்துறை கோதண்டராமசாமி கோவிலில் நேற்று விடியற்காலை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட வரிசையில் நின்றுசாமி தரிசனம் செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் வெளியூர்களில் இருந்து வந்து பொங்கல் வைத்து குல தெய்வங்களை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் அரியலூர் நகரில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள், சிவன், மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோவிலில் வழக்கத்தை விட நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வெள்ளிக்கவசம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி மூலவரான பிரகதீஸ்வரருக்கு புஷ்ப அலங்காரமும், பிரகன் நாயகி அம்பாள் மற்றும் மகிஷாசூரமர்த்தினி அம்பாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாதப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.