விடிய, விடிய முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
விடிய, விடிய முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் 30 நாட்கள் பகல் முழுவதும் உணவு உண்ணாமல், தண்ணீர் கூட பருகாமல் நோன்பு இருந்து தவ வாழ்க்கை அனுசரித்து இரவு பொழுதில் தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை தொழுது இறைவனை வழிபடுவது வழக்கம். ரமலான் மாதத்தில் 27-வது நாள் இரவை லைலத்துல் கதிர் எனப்படும் புனித இரவாக கொண்டாடி வருகின்றனர். இந்த இரவில்தான் புனிதமிக்க திருக்குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதால் இந்த நாளை இஸ்லாமியர்கள் கண்ணியமிக்க இரவாக கருதி சிறப்பு தொழுகை நடத்துகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் லைலத்துல் கதிர் இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் விடிய விடிய சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பெண்கள் அவரவர் பகுதியில் தனியாக உள்ள இடங்களில் கூடி விடிய, விடிய சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். புனிதமிக்க இந்த லைலத்துல் கதிர் இரவில் தொழுகை நடத்தினால் ஆயிரம் மாதங்களுக்கு இறைவனை வணங்கி தொழுகை நடத்தியதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இந்த இரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் அருள்பாலிக்கப்பட்ட இரவாக கருதி ஒவ்வொரு முஸ்லிமும் நேற்று முன்தினம் இரவு புத்தாடை அணிந்து விடிய, விடிய தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை ஜக்காத் எனும் பெயரில் ஏழை எளியவர்களுக்கு வழங்கினர். மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையையொட்டி அனைத்து தொழுகை பள்ளிவாசல்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.