தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 243 தேவாலயங்களில் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 243 தேவாலயங்களில் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 243 தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி விடிய விடிய கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ராமநாதபுரம் ரோமன்சர்ச் பகுதியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இரவு 11.45 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அருள் ஆனந்த் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். உதவி பங்குத்தந்தை டேனியல் திலீபன் சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோல, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சபை குரு பிரேம் கிறிஸ்துதாஸ் அருட்பொழிவாற்றி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தணை செய்தனர். விழாவில் நற்கருணை பெற தகுதி பெற்றவர்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சபை குருவுடன் சபை செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

வாழ்த்து

மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் வாகனங்களில் வீதிவீதியாக சென்று பரிசு பொருட்களையும், இனிப்புகளையும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் கேக், மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியில் உலக நன்மைக்காகவும், புதிய வகை ஊகான் வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 243 தேவாலயங்களிலும் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Related Tags :
Next Story