எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டம்கலெக்டர் பழனி தகவல்
எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் முனைவோர்களுக்கான திட்டம்
தமிழ்நாடு அரசு, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர்களுக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில்முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல் வேறெந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீத வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.
இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம்- 605602 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 9443728015 செல்போன் எண்ணிலோ அணுகலாம்.
விழிப்புணர்வு கூட்டம்
இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 18-ந் தேதியன்று காலை 10 மணிக்கு விழுப்புரம் வி.வி. ஆறுமுகம் செட்டியார் மகாலில் நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற்று அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவதான தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேற பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.