கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ணர் அவதரித்தநாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து அவரின் பாடல்களை பாடி அவரது அருளை பெறுவர். அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று மூலவர் அழகிரிநாதருக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வேணுகோபாலசாமி, சந்தான கோபாலசாமி வைர கிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாண்டுரங்கநாதர் கோவில்
செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒருசில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.
சேலம் அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவிலில் தொட்டில் கட்டி அதில் கிருஷ்ணர் சிலையை வைத்து சிறுவர், சிறுமிகள் வழிபட்டனர். மேலும், கோவிலுக்கு சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமும், சிறுமிகள் ராதை வேடமும் அணிந்து வந்திருந்தனர். கந்தாஸ்ரமத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பொன்னம்மாபேட்டையில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
கிருஷ்ணர், ராதை வேடம்
இதே போல வீடுகளில் சிலர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து உற்சாகம் அடைந்தனர். மேலும், வீடுகளில் இருந்த கிருஷ்ணர் படத்திற்கு பூஜை செய்தும், கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்புகளை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
இதேபோல், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி, அம்மாபேட்டை பட்டைக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.