சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனி பிரதோஷம்
பட்டிவீரன்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற ஜோதிலிங்கேசுவரர் கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது சாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஜோதிலிங்கேசுவரரும், நந்தியும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல் அய்யம்பாளையம் அருள் முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில், காந்திபுரம் சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் மகா பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகாதீபாராதனை நடந்தது.
இதேபோல் கோதமங்கலம் அருகே உள்ள பெரியாவுடையார் கோவிலிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம்
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி புறப்பாடும் நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.