பழனி முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்களுக்காக தைப்பூச சிறப்பு யாகம்


பழனி முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்களுக்காக தைப்பூச சிறப்பு யாகம்
x

பழனி முருகன் கோவிலில், பாதயாத்திரை பக்தர்களுக்காக தைப்பூச சிறப்பு யாகம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில், பாதயாத்திரை பக்தர்களுக்காக தைப்பூச சிறப்பு யாகம் நடந்தது.

தைப்பூச திருவிழா

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வரும் பக்தர்களே அதிகம் பேர் ஆவர்.

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

சிறப்பு யாகம்

இந்தநிலையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் இன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

முன்னதாக காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி ஹோமம், ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம், மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து செய்திருந்தார்.

பக்தர்கள் நலனுக்காக...

இதேபோல் பக்தர்கள் நலனுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது.

வருகிற புதன்கிழமை அழகு நாச்சியம்மன் கோவிலிலும், வருகிற வியாழக்கிழமை வனதுர்க்கையம்மன் கோவிலிலும், 23-ந்தேதி மகிசாசூரமர்த்தினி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது. மேலும் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் திசாஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story