ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


தினத்தந்தி 10 Aug 2023 2:30 AM IST (Updated: 10 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி

கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சண்முகாநதி பகுதியில் பிரசித்திபெற்ற சண்முகநாதன் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று சண்முகநாதன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது முருகனுக்கு 108 கலசாபிஷேகம் மற்றும் வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் கம்பம், அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போடியில், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மேலும் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.


Next Story