கூடாரவல்லியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை


கூடாரவல்லியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x

தேனி மாவட்டத்தில் கூடாரவல்லியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தேனி

கூடாரவல்லி

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, கோவிலுக்கு சென்று பாவை நோன்பு இருந்து வழிபட்டால் திருமாலின் திருவருளை பெற முடியும். வளமான வாழ்க்கை அமையும் என திருப்பாவை பாசுரங்களில் வழிகாட்டுகிறார் ஆண்டாள்.

குறிப்பாக மார்கழி மாதம் 27-ந்தேதி, பாவை நோன்பை நிறைவு செய்யும் நாள் ஆகும். இதனை கூடாரவல்லி என்று அழைக்கின்றனர். இந்த நாளில் அனைத்து பெருமாள், அம்மன் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை மற்றும் திருமாங்கல்ய பூஜை நடைபெறுகிறது.

இந்த பூஜையில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் என்றும், பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பதும் ஐதிகம். இதனால் கூடாரவல்லியையொட்டி நடைபெறும் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர்.

கம்பம் கவுமாரியம்மன் கோவில்

அதன்படி கூடாரவல்லி நாளையொட்டி நேற்று கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து குத்து விளக்கு பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், தாலிக்கயிறு, குங்குமம், பூ, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

வரதராஜ பெருமாள் கோவில்

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கூடாரவல்லியையொட்டி பிரசன்ன நாயகி தாயாருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் பூஜை நடந்தது. மேலும் தாயார் சன்னதியில் மகாதீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தாயாருக்கு பட்டு வஸ்திரம், திருவாபரணங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

போடி சீனிவாச பெருமாள்

போடி சீனிவாசபெருமாள் கோவிலில், கூடாரவல்லியையொட்டி நேற்று காலை ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஆண்டாளுக்கு கல்யாண மாலை அணிவித்து திருப்பாவை வாசிக்கப்பட்டது. அதன்பிறகு விசேஷ பூஜை செய்து தீபாராதனை நடந்தது.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆண்டாளுக்கு, சீனிவாசபெருமாளுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story