கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தோட்டக்குறிச்சி சேங்கல் மலையடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மஞ்சள் நிற ஆடை உடுத்தி, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண் பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல்களை பூஜையில் வைப்பதற்காக கொடுத்தனர். ஆண்கள் தங்களுடைய வாகனம், அலுவலக பணப்பெட்டி சாவி ஆகியவற்றை பூஜைக்காக கொடுத்து பெற்றுக் கொண்டனர். இதேபோல் மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவிலுள்ள பைரவருக்கு பக்தர்கள் எள் விளக்கில் தீபம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.