வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முகாம்
திருவாரூரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முகாம் நடந்தது.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ. திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியினரை கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.