9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சிறப்பு திறன் பயிற்சி
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
திறமையான மனிதவளம் தேவைப்படும் தொழில்களை இணைத்து, இடைநிற்றல் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு தொழில் விருப்பங்கள் மற்றும் பொருத்தமான திறன்களை பற்றி கற்பிக்கப்பட வேண்டும்.
தொழில் பயிற்சி
இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள விருப்பமுள்ள மகளிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் பணிபுரிகின்ற விருப்பமுள்ள விற்பனையாளர்களுக்கும் தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, உதவி திட்ட அலுவலர் முருகேசன், மகாத்மா காந்தி நேஷனல் பெல்லோ கிரண்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.