கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குமருத்துவ சிகிச்சை அளிக்க 8 டாக்டர்கள் கொண்ட சிறப்புக்குழுஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க 8 டாக்டர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு மருத்துவக்குழுக்கள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிப்படைந்த 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை, ஸ்டான்லி, சேலம் போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தும் சிறப்பு மருத்துவக்குழுவினர் வருகை புரிந்து சிகிச்சை அளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
டயாலிசிஸ் சிகிச்சை
8 பேருக்கு மேல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ தேவையை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர் லதா தலைமையில் 8 மருத்துவர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இணை இயக்குனர் தலைமையில், 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
இந்த சிறப்புக்குழு மற்றும் கண்காணிப்புக்குழுவில் உள்ள 11 மருத்துவர்கள், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், தேவையான மருத்துவ தேவைகளை நிறைவேற்றி தருவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பான கட்டமைப்பு வசதி கொண்ட மருத்துவமனை என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சி.பழனி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர். லட்சுமணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.