எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சிற்றம்பலம்:-
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாராந்திர சிறப்பு ரெயில்
அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வாராந்திர சிறப்பு ரெயிலாக வருகிற ஆகஸ்டு் மாதம் 6-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
எங்கெங்கு நின்று செல்லும்?
இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகள் மகிழ்ச்சி
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் இயக்கத்தால் காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் பகுதிகளில் உள்ள ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 வருடங்களுக்குப் பிறகு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த சிறப்பு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க உறுப்பினர்கள், அதன் தலைவர் ஜெயராமன் தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் மணிமுத்து, வர்த்தக சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் பட்டாசு வெடித்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களுக்கும் ரெயில் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
கவுரவிப்பு
இந்த சிறப்பு ரெயிலில் வந்த கேரள எம்.பி. கொடிகுனில் சுரேஷுக்கும், ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் கார்டுக்கும் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை, அண்ணாதுரை எம்.எல்.ஏ., நகராட்சி் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.