ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ரெயில் ரத்து


ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ரெயில் ரத்து
x

தொடர் மழை காரணமாக ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். மலைகளுக்கு நடுவே வளைந்து, நெளிந்து செல்லும் ரெயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதை கருத்தில் கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஊட்டி-கேத்தி இடையே ஜாய் ரைடு என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தவிர பிற 5 கிழமைகளில் தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் கோடை சீசன் முடிந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. இதனால் காலியான இருக்கைகளுடன் ரெயில் சென்று வந்தது. தொடர் மழை காரணமாக ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ரெயில் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.


Next Story