மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு சிறப்பு பயிற்சி -தமிழக அரசு ஏற்பாடு


மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு சிறப்பு பயிற்சி -தமிழக அரசு ஏற்பாடு
x

மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித்தேர்வை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இந்தத்தேர்வில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்துகொள்ளலாம்.

தமிழக மாணவர்கள் இந்தத்தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்தத்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் இல்லை.

காணொலி வகுப்பு

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான தேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத்துறைகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது.

வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையானது மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரி AIM TN என்ற யூ டியூப் சேனல் மூலம் காணொலி வகுப்புகளை நடத்த உள்ளது. தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயங்கும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவழித்து பயிற்சி பெற இயலாத இளைஞர்களுக்கும் இந்த பயிற்சி வகுப்பு உதவும்.

இன்று தொடங்குகிறது

தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுனர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு 3 காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்து காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித்தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.

இந்தத்தேர்வுக்கான பயிற்சி பிப்ரவரி 1-ந்தேதி (இன்று) முதல் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story