திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள்
திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே வருகிற 15-ந்தேதி முதல் 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் (வண்டி எண்: 06012-06011) வாராந்திர சிறப்பு ரெயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும். இந்த ரெயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 17, 24, 31 -ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7 -ந்தேதி ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரெயில் வருகிற 18, 25 -ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி மற்றும் 8-ந்தேதி இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும். இந்த ரெயில் நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் நின்று செல்லும். மேலும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (வண்டி எண்: 06039-06040) வாராந்திர சிறப்பு ரெயில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து வருகிற 15, 22, 29-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
இதேபோல் தாம்பரம்-வேளாங்கண்ணி (வண்டி எண்: 06031) சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 7-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதரிப்புலியூர். சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.