ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆனி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

ஆனி மாத அமாவாசை

ஆனி மாத அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி., ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வே.முத்தம்பட்டி

பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story