கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டைெயாட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்,
ஆங்கில புத்தாண்டைெயாட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு சிறப்பு வழிபாடு
இந்து கடவுள்களின் முதற்கடவுளாக விநாயகர் பெருமான் இருந்து வருகிறார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்க நாள் அன்று பக்தர்கள் முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் மற்ற செயல்களை மேற்கொள்வது வழக்கம். நேற்று ஆங்கில புத்தாண்டு தொடக்க விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். முன்னதாக திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிள்ளையார்பட்டி கோவிலுக்கு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கண்டனூர் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோல் குன்றக்குடி சண்முநாதபெருமான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். காரைக்குடி டி.டி.நகர் கற்பகவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கற்பகவிநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து தங்க அங்கி சாத்தப்பட்டு கற்பகவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை முத்துகுருக்கள் செய்திருந்தார்.
காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் காரைக்குடியை அடுத்த வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் முத்துராமன் செய்திருந்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.