மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதிலும் ஆடி மாதம் நடைபெறும் வழிபாட்டில் வழக்கத்தை காட்டிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
நேற்று ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை என்பதால் தென் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
நேர்த்திக்கடன்
அவ்வாறு ேகாவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவில் பரம்பரை பூசாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் கோவில் பணியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இருக்கன்குடி போலீசார் செய்தனர்.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை அருகே உள்ள கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வனமூர்த்திலிங்கபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பன்னீர், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல செவல்பட்டி காளியம்மன் கோவில், துலுக்கன்குறிச்சி வீரகாளியம்மன் கோவில், தாயில்பட்டி அழகு பார்வதி அம்மன் கோவில், கழுவுடை அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், இணாம்மீனாட்சிபுரம் அழகம்மாள் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.