வைகாசி விசாக திருவிழா- முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்


வைகாசி விசாக திருவிழா-  முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-  திரளான பக்தர்கள் தரிசனம்
x

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

திருநெல்வேலி

நெல்லை:

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது.

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட ஏராளமான முருகன் கோவில்களில் ஹோம பூஜைகள், சிறப்பு ஆராதனை, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர்.

நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் யாகம் நடந்தது.

சிறப்பு ரெயில்

இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ்ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைந்தது. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்புக்கு இரவு 10.10 மணிக்கு வந்தடைந்தது.

இந்த ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இதுதவிர வழக்கமாக இயக்கப்பட்ட ரெயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த ரெயில்களில் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக 1 பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இதே போல் திருச்செந்தூர் -பாலக்காடு இடையே இயக்கப்பட்ட ரெயிலிலும் கூடுதலாக 1 பெட்டி இணைக்கப்பட்டிருந்தது.

வள்ளியூர் முருகன் கோவில்

வள்ளியூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நெல்லை மாவட்டத்தில் குகை கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் விசாகத்திருவிழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலையில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்பு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிேஷகங்கள், சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

சேரன்மாதேவி - களக்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள கொழுந்து மாமலை ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா மற்றும் வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் உற்சவர் உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூரில் இருந்து திருப்புடைமருதூர் செல்லும் வழியில் உள்ள விசாக கட்டளைமடம் இணைந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story