முட்டம் மகாபலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிவப்பெயர்ச்சியையொட்டி முட்டம் மகாபலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உருவாகியது. இதையடுத்து, பார்வதிதேவி வேண்டுதலை ஏற்று சிவபெருமான் கோபமார ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே சிவப்பெயர்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் தைமாத கடைசி திங்கட்கிழமை சிவப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு, ராகு-கேது தீவினைகள் என அனைத்து கிரக தோஷங்களும் விலகுவதோடு, கடன், நோய் விலகும் என கூறப்படுகிறது. மயிலாடுதுறை அருகில் முட்டம் கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோயிலே சிவப்பெயர்ச்சிக்கான விஷேச தலம் என்று கூறப்படுகிறது. மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு, மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி பின்னர் முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத சுயம்பு மகாபலீஸ்வரர் கோவிலில் சிவவழிபாடு செய்து இழந்த செல்வங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இந்த கோவில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக்கொட்டகையில் சாமி சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவப்பெயர்ச்சியையொட்டி நேற்று மகாபலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னிட்டு சிவன், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.பின்னர், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.