பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை சவுந்தரராஜபெருமாள்
காக்கும் கடவுளான பெருமாளுக்கு புரட்டாசி மாதம் மிகவும் உகந்தது.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று 108 திவ்யதேசங்களில் 19-வது திவ்யதேசமான நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் பெருமாளின் விஸ்வரூப சேவை நடைபெற்றது. பின்னர் கோ பூஜையும், புஷ்ப அலங்காரத்தில் தோமாலை சேவையும் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மூலவர் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் ரத்ன அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஆபரணதாரி நாராயண பெருமாள் கோவில், அந்தனப்பேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் வெங்கடபிரசன்ன கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து சென்றனர். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், நெய் விளக்கேற்றியும், அர்ச்சனை செய்தும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜபெருமாள்
வேதாரண்யம் தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னா் வண்ண மலர்களாலும், துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
கரியமாணிக்கம் பெருமாள்
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம், பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சவுரிராஜப்பெருமாள் கோவில்
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதம் சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்ட உடனே கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.