பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நின்ற நாராயண பெருமாள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி 108 திவ்யதேசங்களின் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிவகாசி தேரடியில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் உலகளந்த பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே உள்ள அழகிய சாந்த மணவாள பெருமாள் கோவில், வத்திராயிருப்பு நடு அக்ரகாரத்தில் உள்ள சேது நாராயண பெருமாள், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாள், ஏழாயிரம் பண்ணை தெற்கு தெருவில் உள்ள விண்ணகர பெருமாள் கோவில், செவல்பட்டி மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில்களிலும் பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை என்ற பகுதியில் மலை மீது தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். சுகாதார வசதிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர் பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.