கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டனா்.
புரட்டாசி சனிக்கிழமை
கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நேற்று சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நேற்று மதியம் வழங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால் கரூர் மாவட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தோகைமலை-தரகம்பட்டி
தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் கழுகூர் பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தரகம்பட்டி அருகே கடவூரில் உள்ள வாயுபுத்திர ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ெநாய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசியால் மாலை உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.