ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன்
ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், பானகம், தயிர்சாதம், மிளகு சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவானைக்காவல்
திருவானைக்காவல் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர்கீரிடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.
முசிறி
முசிறி கள்ளத் தெரு மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகள், அரிசி மாவு உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதிைய சேர்ந்த ஏராளமானோர் கலந்த கொண்டனர்.
தா.பேட்டை
தா.பேட்டையில் காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ராஜகணபதி, முருகப்பெருமான், பஞ்சமுக பைரவர், பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, மாரியம்மன், செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.