ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ராமநவமியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திண்டுக்கல்
ராமநவமியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலையில் சுவாமிகள் ராமர், சீதா, லட்சுமணனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, கோபால சமுத்திரம் பால ஆஞ்சநேயர் கோவில், மெயின்ரோடு வீர ஆஞ்சநேயர் கோவில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பட்டிவீரன்பட்டி
இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரத்தில் உள்ள ராமர் கோவிலில், ராமநவமியையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதேபோல் ராமருக்கு சந்தனம், பால், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ராமர், சீதாலட்சுமி, லட்சுமணர், ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.