விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சதுர்த்தியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சதுர்த்தியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சதுர்த்தி விழா
இந்துக்களின் மிக முக்கிய முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள், ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளான்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள ஆகாச விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜையுடன், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர் என பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொழுக்கட்டை படைத்து வழிபாடு
இதேபோல் மாற்றுரைத்த விநாயகர் கோவில், சக்கரை விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகத்துடன் விநாயகருக்கு வெள்ளி கவசம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் வீடுகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடந்தது.
இதனால் களிமண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பல இடங்களில் விற்பனை செய்யபட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வீடுகளில் வைத்து அபிஷேகம் செய்து, அருகம்புல் சாத்தி, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 485 சிலைகள்
விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் திறந்தவெளி வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவாரூரில் 34 சிலைகளும், திருவாரூர் தாலுகா பகுதியில் 20 சிலைகளும், முத்துப்பேட்டையில் 20 சிலைகளும் என மாவட்ட முழுவதும் மொத்தம் 485 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவாரூரில் 20-ந் தேதியும், முத்துப்பேட்டையில் 24-ந் தேதியும் ஊர்வலம் நடத்தப்படுகிறது. மேலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் 22-ந் தேதி என மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, அங்குள்ள நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தை பாதுகாப்புடன் நடத்திட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை தெற்கு தெருவில் அமைந்துள்ள ராஜ விநாயகருக்கு காலை முதல் சிறப்பு யாகமும், சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது. இரவு மூஞ்சூறு வாகனத்தில் வாண வேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.
இதே போல் மேற்கு முகமாக அமைந்துள்ள ஞான சித்தி விநாயகர், வடக்கு தெருவில் உள்ள ஆபத்தை காத்த விநாயகர், ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தில்லைவிளாகம்
முத்துப்பேட்டை தாலுகா உதய மார்த்தாண்டபுரம் ரெயில்வே கேட் அருகில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விநாயகர் ஊர்வலம்
கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்று, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.