அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அதன்படி நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் எலுமிச்சை பழத்தோலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

திருவாரூர்

இதே போல திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன், பவித்திரமாணிக்கம் ருத்ர காளியம்மன் கோவில், திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

வடபாதிமங்கலம்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் புனவாசல் கோட்டை காளியம்மன் கோவிலில் நேற்று ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சக்தி கரகம், அக்னி கப்பரை, அம்மன் வீதி உலா உள்ளிட்டவை நடந்தது. இதனையடுத்து கோட்டை காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை-குடவாசல்

திருமக்கோட்டை பொன்னியம்மன், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

குடவாசல் அருகே உள்ள சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story