முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

தைப்பூசத்திருவிழா

தைப்பூச விழாவையொட்டி நேற்று நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் மாலை 6.30 மணிக்கு சாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு 8 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருமலை பழனியாண்டவர்

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டை பிரிவில் கருமலை பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தையொட்டி பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காவடி பாதயாத்திரை

பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பஜனை கோவில் தெருவில் உள்ள ராமநாத முருகன் கோவிலிலும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. எஸ்.பி.பி. காலனியில் உள்ள முருகன் கோவிலில் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதணை நடைபெற்றது.

இதேபோல் தைப்பூச திருவிழாவையொட்டி பள்ளிபாளையம் அடுத்துள்ள நல்லாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், வீரப்பம்பாளையம் பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடி எடுத்து க சென்னிமலை முருகன் கோவில் மற்றும் சிவன் மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று நல்லாம்பாளையத்தில் இருந்து கிளம்பிய காவடி பாதயாத்திரை பக்தர்கள், ஆவத்திபாளையம் காவிரி கரையோரம் சிறப்பு வழிபாடு நிகழ்வுகளை மேற்கொண்ட பின், பாதயாத்திரையாக பள்ளிபாளையம் வழியே சென்றனர்.

காந்தமலை பாலதண்டாயுதபாணி

மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பூசத்தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் தை பூசத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கம்போல் பூஜைகள் மட்டுமே நடந்தது. அதன்படி கடந்த 28-ந் தேதி முதல் கட்டளைதாரர்கள் அபிேஷக ஆராதனை நடந்தது.

தைப்பூசமான நேற்று ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். தொடர்ந்து பால் குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

அதையடுத்து சாமிக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை பூசத்திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நாமகிரிப்பேட்டை நடுவீதியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சாமி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். காலை முதல் மாலை வரை பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். இதேபோல் பள்ளிப்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூவை மலை முருகன் கோவில் உள்ளது. சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நாமகிரிப்பேட்டை, பச்சடியாம்பாளையம், கல்குறிச்சி, ஜேடர்பாளையம், வெள்ளாளப்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

கபிலர்மலை

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் குதிரை வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், பரமத்திவேலூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளில் பக்தர்கள் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து காவடி ஆட்டம் ஆடி கோவிலை வந்தடைந்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், சத்தாபரணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில் திருவிழா குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

பாலமுருகன் சாமி

இதேபோல் மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவிலில் தைப் பூசம் மற்றும் தை மாத பவுர்ணமியையொட்டி சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம் புதுப்பாளையம் ரோட்டில் எல்லை மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாலமுருகன் சாமி கோவில் உள்ளது. தைப்பூச திருவிழாவையொட்டி பாலமுருகன் சாமி கோவிலில் யாக பூஜை, பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பால் குடம் காவடி எடுத்து வந்தனர். பாலமுருகன் சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் சாமி ஊர்வலம் நடந்தது. அதேபோல் இ.பி. காலனி வலம்புரி விநாயகர் கோவிலில் உள்ள முருகன் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் குருசாமிபாளையம், கூன வேலம்பட்டி புதூர் உள்பட ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story